திண்டிவனம்:
திமுக கூட்டணியில் சேருவது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியை பா.ம.க. சட்டப் பேரவைக் குழு, தலைவர் ஜி.கே. மணி தலைமையில் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கு இடம் ஒதுக்குமாறு எழுந்த கோரிக்கைபற்றி திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப்பட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்றும், அதற்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஓர் இடம் ஒதுக்குவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை பா.ம.க. ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்தறிய பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட யாரையும் நிருபர்களால் ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொள்ள இயலவில்லை. பா.ம.க. தலைமை இதுகுறித்து உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையில் அன்புமணியின் வீட்டில் ஆலோசனை நடத்தினர். 2011-க்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் இடம் என்றாலும், 2013-ல்தான் மாநிலங்களவைக்கு அடுத்து தேர்தல் வரும் என்ற நிலையில், பா.ம.க. அதுவரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதுவரை நாடாளுமன்றத்தில் பா.ம.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்பதால், இப்போதே மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்டுப் பெற முயற்சிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், பா.ம.க. உயர்நிலைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. திமுக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக பா.ம.க. என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதை அறிய பத்திரிகையாளர்கள் வெளியில் காத்திருந்தனர். திமுக தீர்மானத்தின் சாதக, பாதகங்கள், இப்போதுள்ள சூழ்நிலையில் பா.ம.க.வுக்கு உள்ள மாற்று வாய்ப்புகள், கட்சியின் எதிர்கால அணுகுமுறை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டணி தொடர்பாக திமுக தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக முதல்வர் கருணாநிதியை பா.ம.க. சட்டப் பேரவைக் குழுவினர் நேரில் சந்தித்து விவாதிக்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை, கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக் குழுவினர் முதல்வரைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
ஜி.கே. மணி மேலும் கூறியதாவது:
முதல்வரிடம் பேசிய பிறகு அவர் தெரிவிக்கும் தகவல்களைக் கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் தெரிவிப்போம். அதன் அடிப்படையில் ராமதாஸ் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வது என்று இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று மணி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, முன்னாள் அமைச்சர்கள் ஆர். வேலு, பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செந்தமிழ்ச்செல்வன், வேல்முருகன், கலிவரதன், இளவழகன், ராஜா, காவேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக