சென்னையில் முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர். உடன் (இடமிருந்து) அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர்
தி.மு.க. - பா.ம.க. உறவு மற்றும் மாநிலங்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக் குழு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
2011-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், இந்த மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில், மே 30-ல் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க.வுடன் இணைந்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. எனினும், 2011-க்குப் பிறகு நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.தி.மு.க.வின் இந்த முடிவு குறித்து திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
அச் சந்திப்புக்குப் பின் பா.ம.க. சட்டப் பேரவைக் குழுத் தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:
தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்ட முடிவு குறித்து, எங்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்த பல விஷயங்கள் பற்றி பேசினோம். கருணாநிதியுடன் நாங்கள் பேசிய விவரங்களை எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸிடம் தெரிவிப்போம். அவர் இறுதியான முடிவை எடுப்பார். இப்போது தி.மு.க. - பா.ம.க. கூட்டணியில் எந்த மாறுபாடும் இல்லை. இப்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. இப்போது அது ஒரு பிரச்னையே அல்ல என்றார் ஜி.கே. மணி.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குழு முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெறும் என்று தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முதல்வர் கருணாநிதியிடம் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து இன்றையக் கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றார் மு.க. ஸ்டாலின். இந்த மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலிலேயே அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் பா.ம.க. தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குழு எதுவும் பேசவில்லை என்று மு.க.ஸ்டாலின், ஜி.கே.மணி ஆகியோர் ஒருமித்தக் குரலில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக