தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில்...

             வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழிலேயே வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:  

                   தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழிலேயே பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதை வரவேற்கிறோம். அதே நிலையில், தமிழுக்கான முக்கியத்துவத்தை அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்பதை உணர்ந்து முதல்வர் செயல்பட வேண்டும்.    சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழிலேயே வாதாடும் வகையில் வழக்கு மொழியாக தமிழை அறிவித்து,  உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ரயில்வே முன்பதிவு விண்ணப்பங்கள், பயணச் சீட்டுகள், நடைமேடை அனுமதிச் சீட்டு, அஞ்சல் நிலையங்களில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள்,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூரில்....  

                  திருவாரூரில் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் டி.கே. மனோகரன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலர் மா. பிரபாகரன், நகரத் தலைவர் மருது. கண்ணன்,  நகர முன்னாள் செயலர் ராஜேந்திரன், அமைப்புச் செயலர் ராஜேந்திரன், மகளிரணி வள்ளி, ஒன்றியச் செயலர்கள் இரா. சிவா (குடவாசல்), எம்.எம். சண்முகவேல் (வலங்கைமான்), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

மன்னார்குடியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: 

                  மன்னார்குடி மேலராசவீதியில் உள்ள பெரியார் சிலை அருகில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவர் கணேச கவுண்டர் தலைமை வகித்தார்.    கட்சியின் மாவட்ட முன்னாள் துணைச் செயலர் எம்.கே. சண்முகம், நகர்மன்ற உறுப்பினர் கி. ஜீவானந்தம், நகர துணைச் செயலர் ஆர். கண்ணன், மாவட்ட விவசாய அணி தலைவர் ச. அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் வீர. ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.     சிறப்பு விருந்தினராக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.கே. ராஜ்பாலன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.    இதில் கட்சியின் மாநில துணைத் தலைவர் உ. காசிநாதன், மாவட்ட நிர்வாகி கு.பிச்சை, கூத்தாநல்லூர் நகர செயலர் அஷ்ரப், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், ஒன்றியச் செயலர்கள் (நீடாமங்கலம்) வை. ராதாகிருஷ்ணன், (முத்துப்பேட்டை) பாவன்னா, புதிய தமிழகத்தின் சார்பில் சுரேஷ், இளைஞர் எழுச்சி பாசறையின் சார்பில் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில்...

          பொறையாறுஅனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியினர் நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தரங்கம்பாடியில்.... 

                தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் அகோரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து பூம்புகார் எம்எல்ஏ மு.க. பெரியசாமி விளக்கினார்.    செம்பனார்கோவில் பா.ம.க தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.ஜே. முத்துக்குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் மணி செல்வம், மாவட்ட துணைத் தலைவர் பிரபாகர், அமைப்பு செயலாளர் துரை. பார்த்திபன், தரங்கம்பாடி நகர செயலாளர் சுந்தர், வன்னியர் சங்க மாநில துணைப் பொது செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.      இதைத்தொடரந்து, வட்டாட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் அளித்தனர்.

மயிலாடுதுறையில்...

                   .இதேபோல் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமகவின் மாவட்டச் செயலாளர் சி. கணேசன் தலைமை வகித்தார்.    கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் வி.சி. காமராஜ்,சக்திவேல், மணி நிர்மல், கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    பூம்புகார் எம்எல்ஏ மு.க. பெரியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல்ஹமீது, மாவட்ட அமைப்புச் செயலாளர் தங்க. அய்யாசாமி,  வன்னியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் காசி. பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.

சீர்காழியில்....

                       சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமகவின் நாகை மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கட்சியின் நாகை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், சீர்காழி நகரச் செயலாளர் உத்திரபொன்னழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0 கருத்துகள்: