அம்பாசமுத்திரம்:
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பாமக முன்னாள் ஒன்றியச் செயலர் கி. பெருமாள்பாண்டியன் (38) தலை துண்டித்து வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து, அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன். இவர் சேரன்மகாதேவி ஒன்றிய பாமக முன்னாள் செயலர். பெருமாள் பாண்டியனுக்கும், அவரது தங்கை அந்தோனியம்மாளின் மாமனார் சித்திரபுத்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதத்தில் இருதரப்பையும் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெட்டிக் கொலை:
இந்நிலையில், பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த பெருமாள்பாண்டியன் அம்பாசமுத்திரம் நீதிமன்றம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பெருமாள்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் மூலச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கல்லிடைக்குறிச்சி அருகே பிரதான சாலையில் பெருமாள் பாண்டியன் வந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த போலீசார் , பெருமாள் பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இக் கொலையைத் தொடர்ந்து மூலச்சி, கல்லிடைக்குறிச்சியில் பதற்றம் நிலவியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக