புகையிலை பொருள்கள் மீது மத்திய அரசு அதிக அளவில் வரி விதிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை (மே 31) முன்னிட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி மிகவும் குறைவாக உள்ளது. பீடி மீது 9 சதவீத வரி, சிகரெட் மீது 38 சதவீத வரி விதிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.), உலக வங்கி பரிந்துரைக்கும் 65 முதல் 85 சதவீத வரி விதிப்பு அளவாக இது இல்லை. எனவே அடுத்த ஆண்டு முதல் இந்திய அளவில் செயல்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் பணிகள் வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில் புகையிலைப் பொருள்கள் மீது அதிக அளவில் வரி விதிக்க வேண்டும்.
பெண்கள் அடிமையாகாமல்...:
புகையிலைப் பொருள்களால் பெண்கள் பாதிக்கப்படுவதையும், பெண்கள் மீது புகையிலைப் பொருள்கள் திணிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்பது 2010-ம் ஆண்டின் புகையிலை எதிர்ப்பு நாள் முழக்கமாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) முன்வைத்துள்ளது.உலக அளவில் புகையிலைப் பொருள்களை ஆண்கள் பயன்படுத்துவது உச்சகட்டத்தை எட்டிவிட்டதால், பெண்கள் மீது புகையிலைப் பொருள்களைத் திணிப்பது அதிகமாகி வருகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், சுமார் 28 சதவீதத்தினர் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துகின்றனர். பெண்களின் மக்கள்தொகையில் 11 சதவீதத்தினர், அதாவது 5.40 கோடி பெண்கள் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே ஒட்டுமொத்தமாக புகையிலைப் பொருள்களை ஒழித்துக் கட்டுவதும், பெண்கள் அதற்கு அடிமையாகாமல் தடுப்பதும் ஓர் உடனடித் தேவையாகும். எனவே புகையிலைத் தீமையைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள வழிமுறைகளை இந்திய அளவிலும் தமிழக அளவிலும் முழுமையாக அரசு செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக இந்தியாவில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள புகையிலைக் கட்டுப்பாடு சட்டமும் விதிகளும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் புகையிலை பேராபத்திலிருந்து எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக