சென்னை நிருபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்: பா.ம.க., ஆறுமுகம் வலியுறுத்தல்

Latest indian and world political news information

                    'சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்களுக்கு இலவச வீட்டுமனையோ அல்லது சலுகை விலையில் வீடுகளோ கட்டித் தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ம.க., உறுப்பினர் ஆறுமுகம் வலியுறுத்தினார். சட்டசபையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை, சுற்றுலா, முத்திரைத்தாள், பத்திரப்பதிவு, கலை பண்பாடு ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது.

அதன் விவரம்:

                சின்னப்பன் - அ.தி.மு.க: சென்னையில் எங்கு பார்த்தாலும் ஆபாச சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இது, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஆபாச சுவரொட்டிகளை அகற்ற வேண்டும்.விளாத்திகுளம் தொகுதியில் ஷில்லாங்குளம் கிராமத்தில் 3,100 ஏக்கர் நிலம், போலி பத்திரங்களால் கர்நாடகாவைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், இந்த பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. நிலங்களை இழந்து கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 பத்திரப்பதிவு துறை அமைச்சர் சுரேஷ் ராஜன்: 

                          இதுபோன்ற முறைகேடுகள் காரணமாக முன்பு 5,000, 6,000 வழக்குகள் பதிவாயின. இப்போது, 600ஆக குறைந்துள்ளது. நில பரிவர்த்தனை செய்யும்போது, வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்களுடன், அவர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படுகிறது. இதனால், முறைகேடுகள் குறைந்துள்ளன. கடம்பூர் சார் பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறைகேடு நடந்திருப்பது குறித்து, விசாரணை நடத்தப்படும். 

கோபாலன் - காங்கிரஸ்: 

                கடந்த முறை கன மழை பெய்ததால், ஊட்டி பெரியளவில் பாதிக்கப்பட்டது. சேதமடைந்த சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் சரி செய்யப்பட்டாலும், அடுத்து ஒரு கன மழை பெய்தால், மீண்டும் பெரும் சேதம் ஏற்பட்டு, ஊட்டி தனித்தீவாக மாறும் நிலை ஏற்படும்.இப்படியொரு நிலை ஏற்படுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும். ஊட்டியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதை தீர்ப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம் - பா.ம.க: 

                 மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட வசதியாக, மாட்டுவண்டி சுற்றுலாவை அறிமுகப்படுத்த வேண்டும். மாமல்லபுரத்தில் தொல்லியியல் துறை, தொல்லை துறையாக உள்ளது. அத்துறையினர் அங்கு ஒரு பூங்காவை பராமரித்து வருகின்றனர்.இங்குள்ள கதவை அவ்வப்போது பூட்டி விடுகின்றனர். இதனால், கடற்கரைக்குச் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். பூங்காவில் உள்ள கதவை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்கல்பட்டு கொளவாய் ஏரியில், ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அதைப் பயன்படுத்தி சாகச நிகழ்ச்சிகள் நடத்தி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும்.

                 சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் அரசின் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன்பின், இதுவரை வீட்டுமனையோ, வீடுகளோ கட்டித் தரப்படவில்லை.பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனையோ அல்லது சலுகை விலையில் வீடுகளோ கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை, 4,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

லதா - மார்க்சிஸ்ட்:

                  நாட்டுப்புற கலைஞர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை, அரசு அறிவிக்க வேண்டும். பள்ளிகளில் நாடகப் பிரிவை துவக்க வேண்டும். மறைந்த நிருபர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

0 கருத்துகள்: