எம்.எல்.ஏ.க்களை போலீஸ் அதிகாரிகள் மதிப்பதில்லை: பா.ம.க. குற்றச்சாட்டு


              போலீஸ் அதிகாரிகள் எம்.எல்.ஏ.க்களை மதிப்பதில்லை என்று பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் குற்றம்சாட்டினார். 

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:

                  சட்டப் பேரவை உறுப்பினர்களாகிய நாங்கள் முதல்வர், துணை முதல்வர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோரை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால், சாதாரண போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எம்.எல்.ஏ.க்களை அவர்கள் மதிப்பதில்லை. அதுவும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் எங்களை மதிப்பதே இல்லை. ஒட்டுமொத்தமாக காவல் துறையினர் அனைவரையும் நான் குற்றம்சாட்டவில்லை. ஒரு சிலர் செய்யும் தவறு காரணமாக ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் களங்கம் ஏற்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே சிலர் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு போடுகின்றனர். இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு போலீஸ் அதிகாரிகளும் மிரட்டப்படுகின்றனர். இதனால் சில அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த 4 ஆண்டுகளில் 25 என்கவுன்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 29 பேர் பலியாகி உள்ளனர். சில நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றனர். ஒரு போலீஸ் அதிகாரி நான் அப்படித்தான் சுடுவேன் என்று மிரட்டுகிறார். என்கவுன்டர் இறப்பையும் குற்றமாக பதிவு செய்ய வேண்டும். ஆனால் 29 என்கவுன்டர் இறப்புகளிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுவதே இல்லை. அது ஒரு பொம்மை அமைப்பாகவே உள்ளது. 25 என்கவுன்டர் சம்பவங்கள் நடந்திருந்தும் மாநில மனித உரிமை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.காவல் துறையின் பணியில் பாமக மனநிறைவு கொள்கிறது. ஆனால், இளவழகன், தமிழரசு, கண்ணையன் உள்ளிட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் மீது போலீஸôர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாமகவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சில போலீஸ் அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.இலங்கையில் இருந்து வரும் அனைவரையும் இந்தியாவின் எதிரிகளாக போலீஸôர் பார்க்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். 2009-10 கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழகத்தில் 115 அகதி முகாம்களும், 73,619 இலங்கை அகதிகளும் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், 2010-11 கொள்கை விளக்கக் குறிப்பில் 113 அகதி முகாம்களும், 70 ஆயிரம் அகதிகளும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் 3,619 போரின் நிலை என்ன அவர்கள் இலங்கைக்கே திரும்பி சென்று விட்டனரா என்று கேள்வி எழுப்பினார் வேல்முருகன்.

0 கருத்துகள்: