தமிழ் வாழ தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஜி.கே. மணி

         தமிழ் வாழ்வதற்கு தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், என்றார், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி.
 
செம்மொழி மாநாட்டையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது:
 
               எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை அரசு மட்டும் செய்தால் போதாது; ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டும். வெளிநாட்டினர் தூய ஆங்கிலம், கலப்பில்லாத தமிழில் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோ எதிர்மாறாக உள்ளது. ஒவ்வொரு தமிழனும் தூய, ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வர தமிழில் படிக்க வேண்டும். பள்ளிகளில் பிரெஞ்சு படிக்கலாம், ஹிந்தி படிக்கலாம், ஆனால் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை பயின்று பட்டம் பெற்றுவிடலாம் என்ற நிலை இருந்தது. அதை அரசு முயன்று இப்போது மாற்றியுள்ளது. அதற்குத் தீர்வு கண்டவர் முதல்வர் கருணாநிதி.ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். ஊடகத் துறையும் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற வேண்டும்.  தமிழ் வாழ்வதற்கு தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அண்டை நாட்டில் அல்லலுறும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க, அரசும், தாயகத்துத் தமிழர்களும் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

0 கருத்துகள்: