கிருஷ்ணகிரி:
பாமக இல்லாமல் எந்தக் கட்சியாலும் தனியாக ஆட்சியமைக்க முடியாது என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
கட்சிக்காக உழைத்த மூத்தோர்களை கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் நேரில் சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைக் கேட்க வேண்டும். கிராமங்களுக்குச் சென்று கிராம மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய 4 மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கிராமந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளை ஒன்றுகூட்டி, கலந்தாலோசித்து கட்சியை வளர்க்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் செயல்பட்டது போல திட்டமிட்டு இந்த 4 மாவட்டங்களில் செயல்பட வேண்டும். பாமகவை யாராலும் அழித்துவிட முடியாது. அவ்வாறு அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். பாமக அனைத்து மக்களின் பிரச்னைகளுக்காக மட்டுமே போராடும் கட்சி என்றார் அவர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைத்து சமூகத்தினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோருவது, பாலேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகள் பயன்பெறும் வகையில் உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும், கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலர் த.அ. மேகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாவட்டச் செயலர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர் தா.தேவராசன், நகரச் செயலர் பாபுகாந்த் உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக