தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக சிதம்பரம் செயல்படுகிறார்: ராமதாஸ்


சென்னை:

           இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செயல்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். 

வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது:

            69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ. 500 கோடி செலவாகும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜனார்த்தனம் கூறியுள்ளது சரியல்ல. 

               கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தினால் 2 மாதங்களில் ஜாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்கலாம். இதற்கு ரூ. 10 கோடி மட்டுமே செலவாகும்.மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி துணிவுடன் இடஒதுக்கீடு கொள்கைக்காக போராடி வருகிறார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1921-ம் ஆண்டில் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரத்துக்கு கிடைத்துள்ளது. 

                ஆனால், அவர் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரை  வரலாறு மன்னிக்காது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அவர் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்றார் ராமதாஸ்.வழக்கறிஞர் சமூகநீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: