திருவள்ளூர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மாநில இளைஞர் அணி தலைவருமான அன்புமணி கூறினார்.
திருவள்ளூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளர் பாலயோகி வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சரும், மாநில இளைஞர் அணி தலைவருமான அன்புமணி பேசியது:
கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் எந்த சூழ்நிலையிலும் நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடும் உழைப்பே என்றென்றும் வெற்றியைத் தரும். ஆகையால் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் பதவியும், பொறுப்புகளும் அவர்களைத் தேடி வரும். கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அளவில் பொதுக்குழு அமைக்கப்படும்.
ஒன்றியச் செயலாளர்களாக பொறுப்பு வகிப்பவர்களுக்கு அந்தந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைச் செயலாளர்களின் பெயர்களும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அனைத்து கிளை மக்களையும் சந்திக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு முன்பு அந்தந்த பகுதி நிர்வாகிகள் நேரடியாக மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பதுடன் கட்சியின் கொள்கைகளையும் பரப்ப வேண்டும். ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றால் கட்சியே அழிந்துவிடும், காணாமல் போய்விடும் என பலர் பேசுகின்றனர்.
ஆனால் 1991-ம் ஆண்டு திமுக ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. 1996-ம் ஆண்டு அதிமுக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அந்த கட்சிகள் வளர்ச்சி அடையவில்லையா அதுபோல் பாமகவும் வரும் தேர்தலில் முழு எழுச்சி பெறும். பாமகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் பாடு பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன் வடக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ், கிழக்கு மாவட்டச் செயலாளர் மேகநாதன், முன்னாள் மேற்கு மாவட்டச் செயலாளர் சீதாராமன், ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் மோகன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக