நாகப்பட்டினம்:
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வன்னியர் மகளிர் மாநாட்டில் (பெருவிழா) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு, சமுதாயத்தின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, இட ஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் திரளான வன்னியர் மகளிர் பங்கேற்க வேண்டும். பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் எழுப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தாமதமின்றி மக்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் தங்கள் பெயருக்கு முன்பாக தந்தை பெயரின் முதலெழுத்தைத் தலைப்பெழுத்தாக இணைத்து எழுதுவதைப் போல, தாய் பெயரின் முதலெழுத்தையும், தலைப்பெழுத்தாக இணைத்து எழுத வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் இளம் விதவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க, மதுபானக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசு, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற இனப் போரில் பாதிக்கப்பட்டு, அகதிகள் முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மீள்குடியமர்த்தம் செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதை மற்றும் அரசியல் அதிகாரத்துடன் வாழ்வதற்கான நிரந்த அரசியல் தீர்வுக்கு மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இந்திய மீனவர்களுக்கான கச்சத்தீவு உரிமைகளை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கையை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக