தமிழர்களின் வாழ்வு என்பது இயற்கையோடு இயைந்தது: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சென்னை:

              கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். 

          பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா சென்னையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கட்சித் தலைவர் கோ.க. மணி தலைமையில் நடந்த இந்த விழாவில், பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். விழாவில் தமிழர்களின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தும் கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், மான் கொம்பு ஆட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், சாட்டைக் குச்சியாட்டம் என ஏராளமான கிராமிய கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.  

நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 

           தமிழர்களின் வாழ்வு என்பது இயற்கையோடு இயைந்தது. தங்கள் சிறப்பான வாழ்வுக்கு காரணமான இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாக தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறார்கள்.  தமிழர்களின் வாழ்வு முழுவதும் கலையோடு தொடர்புடையது. தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது மகிழ்ச்சி, சோகம், களைப்பு என எல்லா சூழல்களிலும் பாட்டுகளை பாடும் மரபு, தமிழர்களுடையது. அதேபோல் எவ்வளவோ வீர விளையாட்டுகள் இருந்திருக்கின்றன. பெண்களுக்காக மட்டுமே 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. 

            ஆனால், இன்று தமிழர்கள் தங்கள் கலைகளை, வீர விளையாட்டுகளை இழந்திருக்கிறார்கள். நாம் நமது பண்டைய கலைகளை காப்பாற்றியாக வேண்டும்.  எனவே, குழந்தைகளை மாலை நேரங்களில் கட்டாயம் விளையாடச் செய்யுங்கள். பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு நம் குழந்தைகளை நடனம் ஆடச் செய்வதை தடுத்து நிறுத்துங்கள். அதேபோல் நம் வீர விளையாட்டுகளெல்லாம் மறைந்து, இப்போது ஊரெல்லாம், தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். 

            கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.  கிரிக்கெட்டை ஒழித்து, சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற நமது பாரம்பரிய வீர விளையாட்டுகளை பரவச் செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பண்பாடு காக்கப்படும். மக்களிடையே ஒற்றுமை வளரும் என்றார் ராமதாஸ்.  

              இந் நிகழ்ச்சியில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபை பேராயர் சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், புதுப்பேட்டை இமாம் தாஜூதீன், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: