கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில்ஆர்ப்பாட்டம்

http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/16d0943e-d59f-40ad-b454-c74f4387ab65_S_secvpf.gif
சென்னை:

            கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் பொது மக்கள் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.   இதற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க.  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 


ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

            மக்களுக்கான போராட்டங்களை அரசியல் கட்சியினர் நடத்துவது வழக்கம். ஆனால் கூடங்குளத்தில் மக்களுக்கான போராட்டங்களை மக்களே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம்.  127 பேர் இடிந்தகரையில் 9-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு இருக்கிறார்கள். பா.ம.க. இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது.

            அணு உலைகள் மனித இனத்தை அழித்துவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரஷியா, ஜப்பான், அமெரிக்காவில் நடந்த அணு உலை விபத்துகள் இதற்கு முன் உதாரணம் ஆகும். மராட்டியத்திலும் மேற்கு வங்காளத்திலும் பொது மக்கள் எதிர்ப்பின் காரணமாக அணு மின்நிலைய திட்டங்கள் ரத்து செய்துவிட்டனர்.

          ஜப்பானிலும், ஜெர்மனியிலும் இருக்கும் 75 அணு உலைகள் 2020-க்குள் மூடப்படும் என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன. அணு உலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 5 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கதிர் வீச்சுகள் இருக்கும். இதனால் புற்றுநோய் பரவும். இந்த அணு உலைகளை அமைக்கக்கூடாது என்று 20 ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

            மக்கள் கருத்தை கேட்காமலேயே அணுமின் நிலைய திட்டத்தை தொடங்கியுள்ளனர். அணு மின் நிலையம் மூலம் 2.7 சதவீதம் தான் மின்சாரம் கிடைக்கும். எனவே மாற்று மின் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரடியாக கூடங்குளம் செல்ல வேண்டும். மேலும் மத்திய அரசுடன் பேசி
இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

           ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், வி.கே. பாண்டியன். வி.கே.சேகர், சுரேஷ்பாபு, கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

0 கருத்துகள்: