மைக்ரோ பிளானிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைக்ரோ பிளானிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க.வில் பலருக்கு உயர் பதவிகள் வருங்காலத்தில் கிடைக்கும்: பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ் பேச்சு

தைலாபுரம்:

           திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்து பேசியது:

           "தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 31 தொகுதிகள் கிடைத்துள்ளது. பா.ம.க.வினர் அனைவருக்கும் உள்ள நிலை 31 தான் கிடைத்துள்ளதா! கடந்த முறை கிடைத்தது தான் இப்போதும் கிடைத்து உள்ளதா என எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ள எண்ணங்களையும், என்னுடைய உள்ளத்தின் எண்ணங்களையும் நீங்கள் அறிவீர்கள். உள்ளேபோனபோது மகிழ்ச்சியோடு சென்றேன். திரும்பி வரும்போது மகிழ்ச்சியோடுதான் வந்தேன் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். ஆனால் இன்னும் ஒன்று சேர்த்து கிடைத்து இருந்தால் மிக மகிழ்ச்சியோடு திரும்பி வந்து இருப்பேன்.

              கூட்டணியில் சேர்ந்து விட்டோம். இனி நம்முடைய இலக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிகளை பெறும். பா.ம.க.வின் ஒவ்வொரு தொண்டனும் வெற்றிக்கு பாடுபட வேண்டும். 1991, 1996-ல் சமூக நீதி கூட்டணியை அமைத்தோம். அன்று முதல் இன்று வரை சமூக நீதிக்காக பாடுபட்டு வருகிறோம். பா.ம.க. வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற பாடுபட வேண்டும்.

               மேலும் கூட்டணிவேட்பாளர்களின் தொகுதியில் 3 மடங்கு பணி செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராக நம்முடைய வியர்வை துளிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிந்த தயாராக இருக்க வேண்டும். டெல்லி மேலவை தேர்தலில் ஏமாற்றமும், மன உளைச்சலில் இருந்தபோது, தி.மு.க. நிர்வாக குழுவில் தீர்மானம் போட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றியது. உயர்மட்டக்குழுவை கூட்டி திரும்பவும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.

               எப்போதும் தமிழக அரசையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நான் எந்தவித விமர்சனமும் செய்ய வில்லை. தமிழகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பா.ம.க. ஒன்றும் சொல்லவில்லையே என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். கடந்த ஓராண்டாக இந்த கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடன்படிக்கையும் ஏற்பட்டது.

                அரியலூர் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு கருணாநிதி தன்னிடம் அண்ணா கூறியதாக கூறினார். வீட்டில் 10 மற்றும் 15 பட்டுபுடவைகள் இருந்தாலும் விருந்துக்கு செல்லும்போது, ஒரு பட்டுப்புடவைதான் கட்ட முடியும். அடுத்த விழாவிற்கு செல்லும்போதுதான் அடுத்த பட்டுப்புடவையை கட்ட முடியும் என்றார்.  ஒரே ஒரு பட்டுப்புடவை வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது என்றாலும் தி.மு.க. கூட்டணிக்காகவும், அனைத்து கட்சிக்காகவும் கடந்த முறை கிடைத்த 31 என்பதை பெற்றுக்கொண்டேன். தமிழகத்தில் மேலவை நம்மால்தான் வந்தது. இதை கூட்டணி பற்றி பேசியபோது தெரிவித்தேன். அவரும் உடன் இருந்த அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஆமாம் என்றனர்.

              பா.ம.க.வில் பலருக்கு உயர் பதவிகள் வருங்காலத்தில் கிடைக்கும். யாரும் வருத்தம் அடைய வேண்டாம். பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதவிகள் தேடி வரும். தேர்தலுக்கு 35 நாட்கள்தான் உள்ளது. பென்னாகரம் தேர்தலில் அறிமுகப்படுத்திய மைக்ரோ பிளானிங் திட்டம்தான் இந்த தேர்தலில் செயல்படுத்தபோகிறோம்.  தேர்தலில் களப்பணியாளர்களின் பணி முக்கியமானது.  களப்பணியாளர்களிடம் 100 பேர் வாக்காளர் பட்டியல் உள்ளதா என்பதை ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்பட 52 பொறுப்பாளர்களும் கவனித்து அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும்: ராமதாஸ்

ஓமலூர்:

             பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும் என்று ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.  பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட புதிய பிரசார உத்திகளை அடிப்படையாகக் கொண்டு, பாமக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மைக்ரோ பிளானிங் முகாமினை நடத்தி வருகிறது.

            இதன்படி ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் ஆக. 23-ம் தேதி முதல் நடைபெற்று வரும் மைக்ரோ பிளானிங் முகாமில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பங்கேற்றுள்ளனர். மைக்ரோ பிளானிங் முகாமின் முக்கிய நிகழ்ச்சியாக பாமகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணியினருக்கான அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீவட்டிப்பட்டியில் அரசியல் பயிலரங்க பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். 

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசியது:  

             தமிழகத்தில் உள்ள நாற்பது சதவீத இளைஞர்களில் பெரும்பாலானோர் 15 வயதிலேயே மது குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பின்னர் அப்பழக்கத்திற்கு அடிமையாகி விடும் இளைஞர்களால் கிராம பகுதிகளில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு  ரூ.2 ஆயிரத்து 400 முதல்  ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தவிக்கின்றன. இதுமட்டுமன்றி அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தினால் 25 வயதிலேயே ஏராளமான இளைஞர்கள் போதிய உடல் நலமின்றி உயிரிழக்க நேரிடுகிறது. 

             இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாமக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.÷இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாயிலாக அரசியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினால் விவசாயப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்படுவதை பாமக எதிர்க்கவில்லை. 

           ஆனால் நன்கு விளைச்சல் தரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, தரிசு நிலங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்க வேண்டும். இதன் மூலம் விளை நிலங்கள் காப்பாற்றப்படும் என்பதோடு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் அன்புமணி.  

அரசியல் பயிலரங்கினை தொடங்கி வைத்து பாமக நிறுவனனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:  

               தமிழகத்தில் உள்ள இரண்டரைக் கோடி வன்னியர்களும் பாமகவிற்கு ஓட்டு போட்டால் பாமக ஆட்சியைப் பிடிக்கும். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதிக்கும், பீகாரில் லல்லு பிரசாத் யாதவிற்கும் அவரவர் சார்ந்த சமுதாயத்தினர் தங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவினை தருகிறார்கள். இதைப் போன்ற ஆதரவினை வன்னிய சமுதாயத்தினர் வழங்கினால் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்கினால் அதற்கேற்ப அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி பயப்படுகிறார். 

             ஆனால் பாண்டிச்சேரி மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாமகவைத் தவிர உயரிய கொள்கைகள் வேறெந்த கட்சியில் இருந்தாலும் அதில் இணைய தயார் என்று அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை யாரும் அதற்கான கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கவில்லை.  

            தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் பாமகவில் தான் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். மாநில அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆறு லட்சம் இளைஞர்களுக்கு பாமக சார்பில் அரசியல் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய கிராமங்களில் பாமக கொள்கை மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

                ஒவ்வொரு இளைஞரும் தலா 100 ஓட்டுகளை பாமகவிற்கு பெற்றுத்தரும் வகையில் செயலாற்ற வேண்டும். கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி பெண்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர். பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான பல்வேறு சமூக பணிகளை பாமக செய்து வருகிறது. சமூகத்தில் பெரும்பான்மை ஓட்டு வங்கியான பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும். அதற்கு இளம்பெண்கள் அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.   முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தமிழரசு, வை.காவேரி, பெ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது பாமக

ஓமலூர்:

             தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையிலும், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று முடிவாகாத நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

மைக்ரோ பிளானிங்: 

              2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக "மைக்ரோ பிளானிங்'என்ற புதிய திட்டத்தை ஏற்படுத்தி தனது பிரசார முறையை மாற்றிக் கொண்டு களத்தில் இறங்கியது.

                இந்தத் திட்டப்படி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையில், சட்டப்பேரவை பாமக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் குக்கிராமங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக திண்ணையில் அமர்ந்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர். அப்போது, பாமக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று கூறி வாக்கு சேகரித்தனர்.

இப்போதும் அதே பாணி: 

                    இந்தத் தேர்தலில் பாமக வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு தமிழக அரசியல் களத்தில் தன்னுடைய இருப்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. இதற்கிடையே வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் தயாராகாத நிலையில் தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியை இப்போது தொடங்கியுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பென்னாகரம் பார்முலா குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

               இதன்படி, கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், 2011 பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்று ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால், பென்னாகரம் பார்முலாதான் கை கொடுக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர்.இதையடுத்து கட்சியின் அனைத்து மேல்நிலைத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களும் ஒரு பேரவைத் தொகுதியில் 4 நாள்கள் வீதம் முகாமிட்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கிளைகளை ஒருங்கிணைத்தல், கட்சிக் கொடியேற்று விழாக்கள் நடத்துதல் உள்ளிட்ட வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

சாதனைகளை விளக்கத் தயார்!  

             அத்துடன் ஒவ்வொரு கிளையிலும் இளைஞர்களை குறிவைத்து இளைஞர், இளம்பெண்கள் அணியைத் தொடங்க உள்ளனர். கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் பொதுமக்களைச் சந்தித்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சாதனைகள், கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்க உள்ளனர். " மைக்ரோ பிளானிங்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் பாமக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இருந்தே தொடங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின்போது கட்சியில் இணையும் இளைஞர்களுக்கு ராமதாஸ் தலைமையில் தனியாக அரசியல் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அசைக்க முடியாத நம்பிக்கை: 

              சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்தத் திட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ. தமிழரசு, கட்சியின் புதிய திட்டம் மூலம் ஓமலூர் தொகுதியை மீண்டும் பாமக கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவைத் தொகுதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, "மைக்ரோ பிளானிங்' சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.