சென்னையில் நாளை பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் லாலு


         சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகிறார். 
 
இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
 
              சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 2011-ல் மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த உள்ளது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. எனினும், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எந்த அரசாணையும் வெளிவரவில்லை. எனவே, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை, அடையாறில் வரும் வியாழக்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அன்புமணி, ஏ.கே. மூர்த்தி, ஆர். வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச உள்ளனர் என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: