சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் பாமக ஆர்ப்பாட்டம்


ஈரோடு:

                       சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் பாமகவினர்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.    ஈரோடு மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக மாவட்டச் செயலர் பொ.வை.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகரச் செயலர் எஸ்.ஆர்.ராஜ், நகரச் செயலர்கள் ப.இந்துராஜேந்திரன், அ.ரமேஷ், கு.செல்வம் முன்னிலை வகித்தனர்.     

இதில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எல்.பரமசிவம், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் எம்.பி.வெங்கடாசலம் ஆகியோர் பேசியது:

                      பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பன்னெடுங்கால கொடுமைக்கு, ஓர் இடைக்காலத் தீர்வாக பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது என்று அம்பேத்கர் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அம்பேத்கர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமநீதி என்ற அம்பேத்கரின் இலட்சியம் நிறைவேற வேண்டுமெனில், அனைத்து புறக்கணிக்கப்பட்ட ஜாதியினரும், அவரவர் விகிதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பெற வேண்டும்.÷ இதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும்.      இதுதொடர்பாக பிரதமர் மக்களவையில் உறுதியளித்துள்ளார். தற்போது துவங்கியுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, ஜாதிவாரிக் கணக்கெடுப்பாக மேற்கொள்ள பிரதமர் உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக முடிவெடுக்க நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவைக் குழு, உடனடியாக முடிவை அறிவிக்க வேண்டும்.      ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக தொடர்ந்து போராடி வருகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றனர்.  பாமக மாநகர் மாவட்ட முன்னாள் செயலர் கோவிந்தராஜன், மகளிரணி நிர்வாகிகள் சரோஜா, தமிழரசி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: