ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் தேசிய அளவில் போராட்டம்: பா.ம.க. பொதுக்கூட்டத்தில் லாலு ஆவேசம்

சென்னை: 

             ""மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் தேசிய அளவில் போராட்டம் வெடிக்கும்,' என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசினார். பா.ம.க., சார்பில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் பொதுக்கூட்டம் ஒன்று அடையாறில் நேற்று நடந்தது. 

முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது: 

               பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் மிகப்பெரிய சூழ்ச்சி நடந்து வருகிறது. நாங்கள், பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் இல்லை. அதில், ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அடுத்து ஆண்டு பிப்ரவரி மாதம் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முழுமையாக துவங்கவுள்ளது. ஆனால், கணக்கெடுப்பு பணி துவங்கியதாக கூறுகின்றனர். தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரியாக கணக்கெடுப்பது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் குழுவை கூட்டுகின்றனர். இந்த கூட்டத்திற்கு வரும் முன், அமைச்சர் சிதம்பரத்திடம் பேசினேன். அவர், பொறுமையாக இருங்கள் முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்.

                  சாதிவாரியாக கணக்கெடுப்பை  மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்காவிட்டால் தேசிய அளவில் புரட்சி வெடிக்கும்.  நாட்டில் பெட்ரோல், டீசல், உர விலை உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 5ம் தேதி எதிர்க் கட்சிகள் பாரத் பந்த் அறிவித்துள்ளன. அவர்கள் பலமற்றவர்களாக உள்ளனர். எனவே, அதில் நாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை. இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் பேசினார். இக்கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்: