தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் காவிரி பிரச்னைக்கு தீர்வு : ராமதாஸ்


தஞ்சாவூர்:

               தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் காவிரி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.  

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில், தஞ்சை ஆட்சியர் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேலும் பேசியது:  

                     தமிழக விவசாயிகளின் பிரச்னையில் உண்மையான அக்கறை செலுத்திய முதல்வர் ஓமந்தூர் ராமசமி ரெட்டியார் மட்டுமே. அவர் விவசாயி என்பதால், அவர்களின் பிரச்னையை உணர்ந்திருந்தார். தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், இவர்கள் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

                 தமிழகத்துக்கும், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் உணவளித்து வந்த தஞ்சை மாவட்டத்தில்தான் எலிக் கறியை சாப்பிடும் நிலையும், பட்டினிச் சாவும் ஏற்பட்டது.  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை காவிரியில் தமிழகத்துக்கு 137 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தர வேண்டும். ஆனால், இதுவரை 55 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தந்துள்ளது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதல்வர், அவர்களும் என்ன செய்வார்கள் பாவம் என்று கர்நாடகத்துக்குப் பரிந்து பேசுகிறார்.  ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஏராளமான சிறிய அணைகள், வாய்க்கால்களை அமைத்து கர்நாடகம் தண்ணீரை முழுமையாகத் தடுத்து வைத்துள்ளது. 

                      இதைத் தடுத்து நிறுத்த தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  தமிழகத்தில் பாமக ஆட்சியில் இருந்திருந்தால், இங்கிருந்து மின்சாரம், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் அங்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவோம்.  காவிரி டெல்டா விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுக்கு தள்ளப்படாமல் இருக்க வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்.  

                 2015-ல் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படவுள்ள நிலையில், டெல்டா பகுதிகளில் குறைந்துவிட்ட குறுவை, சம்பா சாகுபடி பாதிப்புகளை தமிழக அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. விவசாயிகளுக்காக எந்த நேரத்திலும், எந்தப் பகுதியிலும் போராடத் தயாராக உள்ளேன் என்றார் ராமதாஸ்.  

ஆர்ப்பாட்டத்தில் ...  

                    அரசு அறிவித்த நெல் கொள்முதல் விலையை அனைத்து ரக நெல்லுக்கும் வழங்க வேண்டும், நெல் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயப் பணிகளுக்காக வாங்கப்பட்ட டிராக்டர்களை கடன் நிலுவையைக் காரணம் காட்டி பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும்.  

                 காவிரி டெல்டாவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். பயிர் காப்பீட்டுக்குரிய முழு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்த வேண்டும். வேளாண் இடுபொருள்கள், இயந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் விண்ணப்பித்த மூன்று மாதங்களில் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்.  வேளாண் நிலங்களில் தொழில்சாலைகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  

                 ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க. மணி, விவசாய அணித் தலைவர் காடுவெட்டி குரு, துணைப் பொதுச் செயலர் கோ. ஆலயமணி, நிர்வாகிகள் வழக்குரைஞர் மோகன், சடகோபன், ம.க. ஸ்டாலின், தமிழ்நேசன், செந்தில்நாதன், பானுமதி, சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: