இதுகுறித்து தருமபுரியில் பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியது,
மத்திய அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, குட்கா, பான்பராக் போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்தார். அதேபோல டாஸ்மாக் கடைகள், லாட்டரி விற்பனைக்கு எதிராக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. இதனால், புகையிலை தயாரிப்பு உரிமையாளர்கள், மது தயாரிப்பு ஆலை உரிமையாளர்கள், லாட்டரி அதிபர்கள் இணைந்து பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வெற்றியை பறித்துவிட்டனர்.
பாமகவுக்கு தாற்காலிக தோல்வியை ஏற்படுத்தினாலும் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பென்னாகரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று 2வது இடத்தை பெற்றது. இதே பார்முலாவை பயன்படுத்தி சட்டப்பேரவைத் தேர்தலை பாமக எதிர்கொள்ளும். இதற்காக தமிழகம் முழுவதும் 100 தொகுதிகளை தேர்வு செய்து துவக்கக் கட்டப் பணிகளை செய்து வருகிறோம். இதுவரை 50 தொகுதிகளில் பணிகளை செய்து முடித்துவிட்டோம். தருமபுரிக்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முழுமுயற்சி செய்தவர் அன்புமணி ராமதாஸ்.
அதேபோல தருமபுரி ரயில் நிலையத்தை புனரமைப்பு செய்ய பாமக முன்னாள் எம்.பி. செந்தில் முயற்சி செய்தார். சமூகநீதி, இடஒதுக்கீடு ஆகியற்றுக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. அனைத்து சமுதாயத்தினருக்கும் சாதிவாரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து போராடி வருகிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக