கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
’’பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து சாராயத்தை ஒழிப்பதற்கு தான். அதற்கு பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள வன்னியர்கள் பா.ம.க.வுக்கு ஓட்டு போடுவதில்லை. யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்றும் தெரியவில்லை. நம்மை வேறு சாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. வன்னியர்கள் மற்ற சாதிகாரர்களுக்கு அடியாளாகவும், வேலைக்காரனாகவும் இருக்கவே விரும்புகின்றனர். ஆனால் நாங்கள் நல்லவனாக படித்தவனாக, வேலைக்கு போகிறவனாக சமுதாயம் உருவாக வேண்டும் என்கிறோம். விழிப்புடன் இருந்தால்தான் அறிவார்ந்த சமுதாயமாக உருவாக முடியும். மற்ற சமுதாயத்திற்கு மனதால் கூட தீங்கு நினைக்கக்கூடாது என்ற பயிற்சியை வன்னியர்களுக்கு நாம் அளித்து வருகிறோம்.
ஓட்டு போடுகிற, குடிக்கிற, மற்றவர்களுக்கு உழைக்கிற சாதியாக வன்னியர்கள் இல்லாமல் படித்தவர்களாக இருக்கவேண்டும். அறியாமையை போக்கி மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் அளவிற்கு இருக்கவேண்டும். இந்த மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் வன்னியர்கள் ஒவ்வொரு சட்டமன்றத்திலும் சுமார் 50 ஆயிரம் பேராவது இருப்பார்கள். இந்த மக்கள் ஓட்டுகளை போட்டால் ஜெயிக்க முடியாதா? வன்னியர்கள் ஓட்டு போடாததால் கோபாலபுரத்திற்கும், போயஸ் கார்டனுக்கும் மாறி மாறி செல்லவேண்டியிருக்கிறது.
குடிப்பழக்கம் இல்லாத தெரு, குடிப்பழக்கம் இல்லாத ஊர், பேரூர், நகரம், மாவட்டம், மாநிலம் என்று இருந்தால், தமிழ் மாநிலம் குடிபழக்கம் இல்லாத மாநிலமாக உருவாகும். பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டும், சம உரிமை வேண்டும் என்று வலியுறுத்துவதும் பா.ம.க.தான். குடிப்பழக்கம் இல்லாத கணவன், மகன்களை பெண்கள் உருவாக்க வேண்டும். அதுவே சமுதாயத்திற்கு நல்லது. அதே போன்று வரதட்சணை ஒழியவேண்டும். நாங்கள் செல்லும் திருமண கூடங்களில் 3 மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வருகிறோம்’’என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக