36 தொகுதிகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு: ராமதாஸ்

தைலாபுரத்தில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். (வலது படம்) கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்.
திண்டிவனம்:
             வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 36-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்று  கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். 
            திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம்  கட்சியின் நிறுவனர்  ச.ராமதாஸ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமை தாங்கினார்.   
பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியது:  
             வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 36-க்கும் மேற்பட்ட இடங்களில் பாமக வெற்றி பெறுவது உறுதி. நாம் அணி மாறுவதாக நம் மீது குற்றச்சாட்டு உள்ளது. 25 ஆண்டுகளாக எந்தக் கட்சியும்  தனியாக நின்று போட்டியிட்டதில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கருணாநிதி ஆட்சி வரை கூட்டணிகளை மாற்றி தான் தேர்தலை சந்தித்துள்ளனர். 1967-ல் ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி அமைத்தார். தனியாக செயல்படுபவர்கள் ஓர் ஆண்டுகூட கூட்டணியில் நிலைக்க மாட்டார்கள். 
            வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் தொகுதி கேட்டு பெற உள்ளோம். பொங்கலுக்கு பிறகு மதுரை சென்று கட்சியின் பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளேன் என்றார். 
இளைஞர்களுக்கு தனி ஒதுக்கீடு-அன்புமணி ராமதாஸ்: 
பொதுக்குழுவில் இளைஞர் அணி தலைவரும், முன்னாள்  மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியது:  
                வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட பாமகவில் இளைஞர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2009 நமக்கு சாதனை ஆண்டு.  2010 படிப்பினை ஆண்டு. நாம் அப்போது தோற்கடிக்கப்பட்டோம். ஆனால் நம்மிடமே அப்போது சில குறைகள் இருந்தன. நமது கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் திறம்பட செயல்படவில்லை. தோற்றதும் ஒரு வகையில் நல்லதென்று நினைக்கிறேன். அதையொரு பாடமாக கருத வேண்டும். 
              2010-ல் இருந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 6 மாதங்களாக கட்சியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  பேரவைத் தேர்தலுக்கு பிறகு 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்புகள் மாற்றப்பட உள்ளன. வரும் தேர்தலில் இளைஞர்கள் ஒத்துழைத்தால் தற்போது நம்மிடம் உள்ள 18 இடங்களை 36-ஆக மாற்ற முடியும். கூட்டணி குறித்து நிறுவனர் தகுந்த நேரத்தில் அறிவிப்பார் என்றார் அன்புமணி ராமதாஸ்.
தீர்மானங்கள்: 
             பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களப் படையினரின் வெறிச்செயலை கண்டிப்பதுடன், போரின்போது இலங்கை  ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்களையும், அத்துமீறல்களையும் போர்க் குற்றங்களாக கருதி விசாரணை நடத்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் முன்வந்திருப்பதை வரவேற்பது. 
              கச்சத் தீவு பிரச்னை தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும்,தமிழக மீனவர்களை காக்க வேண்டுமென்ற குரல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க செய்யவேண்டும். 
           மருத்துவக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் மாணவர்களை  சேர்ப்பதற்கு தேசிய அளவில் ஒரு பொதுவான நுழைவுத்தேர்வை நடத்துவதென்ற முயற்சியை இந்திய மருத்துவ கவுன்சில் கைவிட வேண்டும். மழை, வெள்ள நிவாரண உதவிகளை மாநில அரசு முழு அளவில் வழங்க முன்வர வேண்டும். 
               விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
            பொதுக் குழுவில் கட்சியின் இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, அ.கி.மூர்த்தி,என்.டி.சண்முகம், கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன்,மாநில பொருளாளர் சையது அலி அகமது, கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் விரும்பும் கட்சி பாமக தான். மது, புகை பிடித்தல் , சினிமா ஆபாசம் & பித்து கூடாது என்று போராடும் ஒரே கட்சி பாமக. இதனால் பெண்கள் விரும்புகிறார்கள். குடிப்பதால் இளைஞர்கள், குடும்ப தலைவன் இப்படி குடும்பமே கெட்டு போகிறது. இதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போகவும் தயாராக உள்ளனர். அரசு டாஸ்மாக்குக்கு பதிலாக ஆவின், பாவின், பழரசம், மளிகை பொருட்கள் விற்கலாம். பெண்களின் மகிழ்ச்சி தான் மாநிலத்தின் வளர்ச்சி.