திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்




கோபாலபுரம்:

        திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

             முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாம நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

           திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கான உடன்பாடு கையெழுத்தானது. மேலும் மாநிலங்களவையில் ஒரு இடம் பாமகவுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு முடிந்ததும் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 

              மகிழ்ச்சியுடன் வந்தேன். மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கிறேன். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி பெறும். மேலும் சில கட்சிகள் இந்த கூட்டணிக்கு வர இருக்கின்றன.

கேள்வி:  கடந்த தேர்தலின் போதும் இதே அளவுதான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

பதில்:  இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி:  சோனியா காந்தியை சந்திப்பீர்களா?
பதில்:  முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ஏற்கனவே டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசி விட்டார்.

கேள்வி:  இன்று கூட்டணி முடிவாகும் என்று எதிர்பார்த்து வந்தீர்களா?
பதில்:  எதிர்பார்த்தும் வந்தேன்.

கேள்வி:  தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி விடலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளதே?
பதில்:  தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் அமோக வெற்றி பெறும்.

கேள்வி:  45 தொகுதிகள் யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி என்று முன்பு கூறினீர்களே?

பதில்:  தேர்தலுக்கு முன்பு இதுபோன்று கூடுதல் தொகுதிகளை சொல்வது வழக்கம்தான்.

கேள்வி: கடந்த தேர்தலிலும் இதே அளவு தொகுதிகள்தான் கிடைத்தன. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் போட்டியிடுகிறீர்களே அது ஏன்?

பதில்:  நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

கேள்வி:  இந்த தேர்தலில் உங்கள் பிரசாரம் எப்படி இருக்கும்?

பதில்:  அது பின்னர் தெரிய வரும் என்றார்.

0 கருத்துகள்: