சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி 4-வது முறையாக களம் இறங்குகிறது.
புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி வன்னியர் சமுதாய வாக்காளர்கள் அதிகம் உள்ளது தொகுதி. இத்தொகுதியில் வன்னியர் 45 சதவீதமும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் 35 சதவீதமும், வேளாளர், யாதவர், செட்டியார் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 20 சதவீதத்தினர் உள்ளனர். 1952 தேர்தலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி படையாச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957 தேர்தலில் சாமிக்கண்ணு படையாச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து வன்னியர் சங்கம் உருவாகி பாமக உதயமான பிறகு 1991-ம் ஆண்டு புவனகிரி தொகுதியில் முதன்முதலாக பாமக தனித்து போட்டியிட்டது. பு.தா.அருள்மொழி போட்டியிட்டு கனிசமான வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலில் பாமகவும், திமுகவும் நேரடியாக போட்டியிட்டன. இதில் திமுக வேட்பாளர் ஏ.வி.அப்துல் நாசர் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் பு.தா.இளங்கோவன் 2-ம் இடத்தை பெற்று தோல்வியுற்றார்.
பின்னர் 2001 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. 2006 தேர்தலில் அதிமுகவும், பாமகவும் நேரடியாக போட்டியிட்டன. இதில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவர் 2-ம் இடத்தை பெற்று தோல்வியுற்றார். இந்நிலையில் தற்போது 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக புவனகிரி தொகுதியில் 4-வது முறையாக களத்தில் இறங்குகிறது.
புவனகிரி தொகுதியில் போட்டியிட மாநில பாமக செயலாளர் அறிவுச்செல்வன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபுரதன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டலாம் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 4-வது முறையாக களம் இறங்கும் பாமக இந்த முறையாவது வெற்றி வாய்ப்பை பெறுவது எதிர்த்து போட்டியிடும் கட்சி மற்றும் வேட்பாளரை பொறுத்துதான் உள்ளது.
ஆனால் புவனகிரி தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. புவனகிரி தொகுதி அதிமுக கூட்டணியில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளதால், பாமகவினர் இந்த முறை எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக