தொகுதி வரைபடம்.
நெய்வேலி:
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ம.க.வுக்கு நெய்வேலித் தொகுதி ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் நெய்வேலி தொகுதி பா.ம.க.வினர் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடித் தொகுதியிலிருந்த நெய்வேலி நகரம் தற்போது, பெரும்பாலான பண்ருட்டி ஒன்றிய கிராமங்களை உள்ளட்டக்கி நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது. மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட தொகுதி நெய்வேலித் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 807. இதில் 83 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 78 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் நெய்வேலித் தொகுதியை பெறுவதில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும் 2 ஆண்டுகளாக நெய்வேலித் தொகுதியை பெற்றே தீர வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு நெய்வேலி ஜவகர் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம், என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் என பல்வேறு பிரச்னைகளையும் தலையிட்டு, அவர்களுக்காக களமிறங்கி வெற்றி பெற்றார்.
மேலும் என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலம் கொடுத்தோருக்கு இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு 6 லட்சமாக உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளால் வேல்முருகனுக்கு தொகுதியில் நல்ல பெயர் கிட்டியது. இதையடுத்து பா.ம.க. தலைமையிடம், தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, தி.மு.க. கூட்டணியில் நெய்வேலித் தொகுதி பெற்று விட்டதாக கூறப்படுகிறது. இத் தகவலறிந்த தொகுதியில் உள்ள பா.ம.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாததால், கூட்டணி கட்சியினரை சந்தித்து தேர்தல் பணிகளை தொடங்க முடியாமல் உள்ளனர் .இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் நெய்வேலித் தொகுதி எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் எனத் தெரியாததால் அ.தி.மு.க.வினர் திகைப்பில் உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.ஒருவேளை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் வேல்முருகனும், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. சார்பில் சொரத்தூர் ராஜேந்திரனும் போட்டியிடும் பட்சத்தில் போட்டி பலமானதாக இருக்கும்.
ஏனெனில் கடந்த 2006-ம் தேர்தலின் போது, இவர்கள்இருவரும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டனர். இதில் சொற்ப எண்ணிக்கையில் சொரத்தூர் ராஜேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே இம்முறையும் போட்டி பலமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக