நாகை மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகை மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மயிலாடுதுறையில் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

மயிலாடுதுறை:

          அதிமுகவிற்கு ஆதரவாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.   

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அளித்த பேட்டி:    

            ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் தண்டனைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவருக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுத வேண்டும்.   சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்த ரூ. 200 கோடி மதிப்பிலான நிலம் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டதாகவும், அந்த இடம் தற்போது தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கும் புகார் குறித்து முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.  

            தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மும்முனை மின்சாரம் குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்படுகிறது.   நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டம் தயார் செய்யப்பட்டும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்தும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   

          மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கும், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் தமிழக அரசை பாமக வலியுறுத்துகிறது.   உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாமகவின் ஆதரவு கிடையாது.   

           கடந்த திமுக ஆட்சியில் 40 பேரும், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 பேரும் போலீஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளனர்.    தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றார் ராமதாஸ்.   கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. கே. மணி, மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. ஐயப்பன், முன்னாள் துணைப் பொதுச் செயலர் மு.க. பெரியசாமி,  மாநில துணைச் செயலர் க. அகோரம், மாநில செயற்குழு உறுப்பினர் த. கலியமூர்த்தி, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பு செயலர் தங்க. அய்யாசாமிஆகியோர் உடனிருந்தனர்.

நாகை மாவட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

நாகை:

            தமிழக சட்டபேரவை தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். 

முன்னதாக வேளாங்கண்ணியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

               தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. தேர்தல் பணியில் மாவட்ட கலெக்டர்கள், உதவி கலெக்டர்கள், தாசில்தார்களை மாநில அரசுடன் கலந்து பேசி நியமனம் செய்ய வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் இடம் மாற்றம் செய்கிறது. 

             அதோடு அவர்களை விடுமுறையில் செல்லலாம் என்றும் ஆணையிடுகிறது. மாநில அரசோடு கலந்து பேச வேண்டாமா? என்றால் தேவையில்லை என்கிறார் தேர்தல் ஆணையர் குரேஷி. தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. இன்னொரு எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது. சோதனை என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். ரூ.20 கோடி, ரூ.30 கோடி பிடிபட்டுள்ளது என்கின்றனர். வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் பிடிப்பட்டதாக சொல்கிறார்கள். தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்கிறார்கள்.

                ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அதிக அளவில் பணத்தை செலவிட திட்டமிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஏற்கனவே ரூ.5 கோடி வழங்கப்பட்டு விட்டதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகமாக பேசப்படுகிறது. இதனை மத்திய புலனாய்வு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், நிர்வாகிகள் வீட்டில் சோதனை போட வேண்டும் என்ற எண்ணம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கூட இல்லை. குதிரைக்கு கண்ணை மூடி கடிவாளம் போட்டது போல தேர்தல் ஆணையம் கண்ணைக் கட்டிக்கொண்டு சோதனை நடத்தி வருகின்றது.

                 அதாவது தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. அ.தி.மு.க. பக்கம் திரும்பி பார்க்க முடியவில்லை என்பதை விட அந்த பக்கமே திரும்பவில்லை என்பதுதான் உண்மை. தேர்தல் ஆணையத்தின் நடுநிலையற்ற இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக சோதனை செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடும் வக்கீல் ராஜகோபால் ஜெயலலிதாவிற்காக பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர் என்பது தெரியவருகிறது.

                   மாநில டி.ஜி.பி. லத்திகா சரண், மாநில உளவுத்துறை தலைவர் மற்றும் சில அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வார்கள் என கருதி இடம் மாற்றம் செய்த தேர்தல் ஆணையம் தனது சார்பில் மேற்கண்ட வழக்கில் வாதாட அ.தி.மு.க. தலைவருக்காக வாதாடிய வக்கீலை நியமித்தது எப்படி? இது எந்த வகையில் நடுநிலை ஆகும். இதனை தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.

                பாரபட்சமின்றி நடக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை நம்பும்படியாக காரியங்களை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். இதுவரை நடந்த காரியங்களை பார்த்தால் தேர்தல் ஆணையம் ஒரு எதிர்க்கட்சி அணி அல்லது அங்கு இணைந்த அங்கம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்கிறோம். நோயாளி யார் என்று தேர்தல் அதிகாரியிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

                       தேர்தல் ஆணையத்தின் இந்த களங்கம் என்றும் நீங்காது. குரேஷி இதில் சரித்திரம் படைத்து விட்டார். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையற்ற போக்கு என்று பிற்காலத்தில் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் இந்த சட்டபேரவை தேர்தலில் குரேஷி தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நிச்சயம் எடுத்துக்காட்டப்படும் என்றார்.

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க.மாற்று வேட்பாளர் சின்னத்துரை வேட்பு மனு ஏற்கப்பட்டது

தஞ்சாவூர்:
 
             நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சதாசிவன் வேட்பு மனு, சொத்து கணக்கு விவரம் சரியாக காண்பிக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. பா.ம.க. மாற்று வேட்பாளர் சின்னத்துரையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.