பா.ம.க. இளைஞர் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ம.க. இளைஞர் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

        மக்கள் பிரச்சனைகளுக்காக போராடாமல் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தூங்குகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி

            சமச்சீர் கல்வி, சட்டப்பேரவை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இப்பிரச்சனையில் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படவில்லை. தூங்குகிறார் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டார். எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாமல், போராட்டமும் நடத்தாமல் அந்த கட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அறிக்கை விட்டாரா, போராடினாரா. அவரைப் பற்றி மக்கள் புரிந்துகொண்டார்கள் என்றார்.

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைக்கலாம்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியது:-  

            தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் முதன்முறையாக இணைந்த தேர்தல் விடுதலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

             பா.ம.க.வை பொறுத்தவரை நல்ல எதிர்க்கட்சியாக செயல்படும். எதிரிகட்சியாக இருக்க மாட்டோம். அரசாங்கம் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வந்தால் எதிர்த்து போராடுவோம்.  

           கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீடு திட்டம் முழுமையும் காப்பீடு செய்யப்பட்டது. அதில் தனியார்களும், தனியார் மருத்துவமனைகளும் தான் லாபம் அடைந்தன. எங்களுடைய கருத்து அரசு மருத்துவமனைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் மருத்துவமனைகள் தரத்தை உயர்ந்து நவீனபடுத்த வேண்டும். காப்பீடும் இருக்க வேண்டும்.

            மக்களை சோம்பேறிகளாக்கும் இலவச திட்டங்கள் வேண்டாம். இலவசங்களை நிறுத்தி விடுங்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை கட்டியது. கட்டியது சரி, ஆனால் கட்டிய இடம் சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  சென்னைக்கு வெளியே 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி டவுன்ஷிப் போல் கட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு நகரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

            புதிய தலைமை செயலகத்தை வீணடித்து விடக்கூடாது. அதில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வரலாம். இதனால் லட்சக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் பயன் அடைவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

2011-ம் ஆண்டு இளைஞர் சங்கத்தின் ஆண்டு : அன்புமணி ராமதாஸ்

தஞ்சை:

             தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களின் பா.ம.க. இளைஞர் சங்க பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.  மாநில இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
 
விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,

              "எதிர்காலமே இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர் சக்தியை கொண்டு தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும். வருங்காலத்தில் நம்கட்சியை இளைஞர்கள்தான் வழிநடத்தப் போகிறீர்கள். இளைஞர்களை நம்பிதான் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.கவும் உள்ளது.

                   வன்னியர் சங்கத்திற்கு எப்படி தனித்துவம் உள்ளதோ, அதே போன்று இளைஞர் சங்கத்திற்கு தனித்துவம் உண்டாக்கப்படும். மேலும் இந்த இளைஞர் சங்கத்தை பதிவு செய்யப்போகிறேன். குறிப்பாக இளைஞர் சங்கத் திடம் எதிர்பார்ப்பது ஒழுக்கம், கட்டுப்பாடு, உண்மையான உழைப்பு ஆகிய மூன்றை மட்டுமே.  இந்த மூன்றையும் செய்தால் பதவி உங்களை தானாக தேடிவரும். இளைஞர் சங்கத்திற்கு தனியாக ஒதுக்கீடு கொடுங்கள் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் நான் கேட்டேன். அவரும் தருவதாக கூறிவிட்டார்.

                    நாம் 10 கட்டளைகளை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். அந்த கட்டளைகள் படி நடப்பேன் என சத்தியம் செய்யவேண்டும். 

எல்லோருக்கும் தரமான ஒரே சீரான கட்டணமில்லாத சமச்சீர் கல்வி, 
சமூக நீதி, 
தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு, 
படிப்பகங்களை உருவாக்குதல்,
வன்முறை, 
தீவிரவாதம், 
ஆபாசம், 
பெண் அடிமை அகற்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும், 
கல்வியில் நீதி, 
சமூக நீதி, 
வரதட்சணை கொடுமை, 
மது, பான்பராக் போன்ற போதை பொருட்களை அகற்றுவது 

                போன்ற 10 கட்டளைகளை நாம் கடைப் பிடிக்க வேண்டும்.

                  இளைஞர் சங்கத்தினர் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். முதலில் நாம் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். பசுமையான சூழ்நிலை உருவாக மரம் நடவேண்டும். வித்தியாசமான புதுமையான அரசியலை உருவாக்க போகிறோம்.

               2011-ம் ஆண்டு இளைஞர் சங்கத்தின் ஆண்டு. இளைஞர் சக்தி முழுமையான சக்தியாகும். வேகமான செயலாக்கம் மட்டுமே எனக்கு தேவை. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 இளைஞர்கள் 300 இளம் பெண்கள் உள்பட மொத்தம் 1300 பேரை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கிராமத்தில் 3 இளைஞர்கள், ஒரு இளம்பெண் இருந்தால் அந்த 1300 பேரில் 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளித்து அரசியல் செய்யப்போகிறோம்’’என்று பேசினார்.,

 

திமுக, அதிமுக, தேமுதிக வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது-அன்புமணி

சேலம்: 

             பாமகவில் தான் தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். ஆனால், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய பிற கட்சிகளின் வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி கூறினார்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட பாமக இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டத்தில்
பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி பேசுகையி்ல், 
             இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பாமக தான். இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைகின்றனர். ஆனால், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய பிற கட்சிகளின் வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது. பாமக இளைஞர் சங்கத்தினர் தங்கள் பகுதியின் சிறிய பிரச்சனைக்குக் கூட போராட்டம் நடத்த வேண்டும்.

               இளைஞர் சங்கத்தில் கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், விசுவாசத்துடனும் உழைக்கும் இளைஞர்களுக்கு கட்சியில் மட்டுமின்றி பல்வேறு பதவிகள் காத்திருக்கின்றன. இதற்காக தலைவர் ராமதாஸிடம் சண்டை போட்டு உங்களுக்கு பதவிகளை வாங்கித் தருவேன். எதிர்காலத்தில் கட்சியை வளர்க்கும் உங்களுக்கு எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகள் காத்திருக்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அன்புமணியே நேரில் வருவான்.

            பாமக இளைஞர்களுக்கென விரைவில் மாத இதழ் ஒன்று வெளியிடப்படும். இனிமேல் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெருகி விட்ட தகவல் தொழில்நுட்பம் காரணமாக அவர்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்றார்.

மழை நிவாரண தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: பா.ம.க. வலியுறுத்தல்

புதுச்சேரி:

               பா.ம.க.வின் இளைஞர் அணி புதுவை மாநில பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் 45 அடி ரோட்டில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல். ஏ. தலைமை தாங்கினார்.

                மாநில இளைஞர் அணி தலைவர் தங்க.அறிவழகன், செயலாளர்கள் மாதவன், சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதியழகன் வரவேற்றார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


               
புதுவை மாநில இளைஞர் பொறுப்பாளர்களை நியமனம் செய்த டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து கொள்வது. கட்சிக்கு இளைஞர் அணி பக்கபலமாக இருந்து தொகுதி வாரியாக கட்சி கொடி ஏற்றி விழாவை நடத்துவது.

              புதுவையில் வெள்ள சேதங்களை அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து சேத மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து அதன் மூலம் மத்திய அரசை அணுகி வெள்ள நிவாரண நிதி பெற்று பொது மக்களின் துயரை துடைக்க வேண்டும்.

                கிராம பஞ்சாயத்துகளுக்கு வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மழை பாதிப்பை கருத்தில் கொண்டு மழை நிவாரண தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதாக காலரா, பேதி, விஷகாய்ச்சல் போன்ற நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


                 கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜெயபாலன், வி.பி.பி.வேலு, பொருளாளர் கோபி என்ற கேபாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகர், ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.