உழைப்பவருக்கு தான் சீட்டு: ராமதாஸ்



 


                   தேர்தல் தேதி அறிவித்த பின் தான் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், கட்சிக்கு உழைப்பவருக்கு தான் சீட்டு என்றும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

                    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்காலில் புவனகிரி சட்டசபை தொகுதி இளைஞர் இளம் பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

                 தமிழகத்தை நிறைய பேர் ஆட்சி செய்துள்ளனர். ஒற்றுமை இல்லாததால் ஒரு வன்னியன் இதுவரை ஆள முடியவில்லை. காசுக்கு ஓட்டு போடுகின்றனர். பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும். இளைஞர்கள் எல்லாம் பா.ம.க.,வில் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால் 100 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம். அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கின்றனர். ஒருவரிடம் கூட இருக்க முடியவில்லையே. அனைவரும் நம்மை அழிக்கப்பார்க்கின்றனர்.

                     கடந்த லோக்சபா தேர்தலில் வன்னியர்கள் ஜெயிக்கக் கூடாது என, ஏழு தொகுதிகளிலும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தோற்கடித்தனர். கட்சி பொறுப்புகளுக்கு இளைஞர்களை நியமித்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தற்போது என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. தொழிலாளர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்கள் சிந்தும் ஒரு துளி வியர்வைக்கு ஒரு ரூபாய் என்று பார்த்தால், அவர்களால் கொடுக்க முடியாது. அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக கொடுக்க வேண்டும்.

                  இப்பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை செய்துள்ளோம். நாங்கள் கடுமையான போராட்டம்  செய்தால், என்.எல்.சி., நிர்வாகம் தாங்காது. எனவே, தொழிலாளர்களின் கோரிக்கையை என்.எல்.சி., நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.

                   நாம் எம்.எல்.ஏ., ஆகிவிடலாமா என நமது கட்சி பொறுப்பாளர்கள் கனவு காண்கின்றனர். புவனகிரி தொகுதியில் 10 பேர் அந்த பட்டியலில் உள்ளனர். ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் தான் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கட்சிக்கு உழைப்பவருக்கு தான் சீட்டு என்றார்.

0 கருத்துகள்: