சேலம்:
தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மற்றும் சில கட்சிகள் உள்ளன.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி தாரமங்கலம் ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே பா.ம.க. எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று உள்ளனர். இந்த தொகுதிகளை மீண்டும் பா.ம.க. கேட்டுப்பெற உள்ளது. தொகுதி சீரமைப்பில் தாரமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தொகுதிக்கு பதிலாக சங்ககிரி அல்லது சேலம் மேற்கு தொகுதியை பா.ம.க. கேட்டுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தர்மபுரி தொகுதியில் பா.ம.க.வெற்றி பெற்று உள்ளது. பாலக்கோடு தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு அ.தி.மு.க.விடம் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் அந்த 2 தொகுதிகளையும் மீண்டும் பா.ம.க. கேட்டுப்பெற உள்ளது. கடந்த முறை நடந்த பெண்ணாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 47 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இதனால் அந்த தொகுதியையும் அந்த கட்சி தி.மு.க.விடம் கேட்டுப் பெற உள்ளது. கடந்த தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் இடம்பெற்ற 17 பஞ்சாயத்து பகுதிகள் இந்த முறை தர்மபுரி சட்டசபை தொகுதியில் இடம்பெற்று உள்ளது. இதனால் தர்மபுரி தொகுதியில் மீண்டும் வெற்றி கிடைக்கும் என்று பா.ம.க. நம்புகிறது. மேலும் இந்த கட்சி புதிதாக உருவாக்கப்பட்ட பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கும் குறி வைத்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த முறை காவேரிப்பட்டணம் தொகுதியில் பா.ம.க. வெற்றி பெற்றது.
இதனால் தற்போது அந்த தொகுதி மறு சீரமைப்பில் நீக்கப்பட்டு உள்ளது. புதிதாக பர்கூர் தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் காவேரிப்பட்டணம் தொகுதியில் இருந்த பல பகுதிகள் தற்போது பர்கூர் தொகுதியில் உள்ளன. இதனால் பர்கூர் தொகுதியை பா.ம.க. கேட்டுப்பெறும் என்று உறுதியாக தெரிய வந்து உள்ளது. கடந்த 6 மாதங்களாகவே பா.ம.க. நிர்வாகிகள் அந்த தொகுதியில் வலம் வந்து பிரசாரப்பணிகளில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஓசூர்,தொகுதியையும் கேட்டுப் பெற உள்ளதாக பா.ம.க. வினர் மத்தியில் பேச்சு உள்ளது.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் ஓசூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை அந்த தொகுதியை கேட்கலாம் என்ற முடிவுக்கு பா.ம.க. வந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கபிலர் மலை தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்றது. மீண்டும் அந்த தொகுதியை பா.ம.க. கேட்டுப்பெற உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக