திமுக தனித்து ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு: ராமதாஸ், திருமாவளவன் அறிவிப்பு

பாமக நிறுவனர் எஸ்.ராமதாûஸ அவரது சென்னை அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
சென்னை:

          தனித்து ஆட்சி அமைக்க திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 

                 பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதல் முறையாக ஒரே அணியில் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டுப் பிரசாரம், தேர்தல் உத்திகள் குறித்து இருவரும் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.  

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் கூட்டாக கூறியது:  

             பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறோம். இன உணர்வு, தமிழ் பாதுகாப்பு தளங்களில் நாங்கள் தீவிரமாக இணைந்து பணியாற்றியுள்ளோம். தேர்தல் அரசியலில் இப்போதுதான் இணைந்துள்ளோம்.  எங்கள் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பாமகவும், விடுதலைச் சிறுத்தை2களும் இணைந்து விடக்கூடாது என்று எண்ணியவர்களின் கனவு தகர்ந்து விட்டது. நாங்கள் இணைந்துள்ள திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். கருணாநிதி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் போவது உறுதி.  

             ஒடுக்கப்பட்ட வன்னியர்களும், தலித்துகளும் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்களின் 20 ஆண்டுகால கனவு இப்போது நனவாகியுள்ளது. நாங்கள் ஒரே அணியில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது உழைக்கும் மக்களின் விருப்பமாக இருந்தது. அது இப்போது சாத்தியமாகியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சமூக நல்லிணக்க கூட்டணியாக உள்ளது. பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் வலுவாக உள்ளது. 

              விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 10 தொகுதிகளில் பாமக வலுவாக உள்ளது.  வரும் தேர்தலில் கூட்டணி வலுப்பெற எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நல்லிணக்கத்தை உருவாக்குவோம்.  திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காகவும் நாங்கள் கடுமையாக உழைப்போம். தேர்தலில் இணைந்து பிரசாரம் செய்வோம்.  வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டால் திமுக தனித்து ஆட்சி அமைக்க நாங்கள் 5 ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். 

                2ஜி அலைக்கற்றை முறைகேடு தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.

0 கருத்துகள்: