ஓசூர் நகராட்சி தலைவர் பா.ம.க., வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ.மனோகரன் அதரவு

ஓசூர்: 

          ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்து உள்ளார்.

                ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் பா.ம.க., சார்பில்  மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வில் பாலகிருஷ்ணரெட்டி, தி.மு.க., வில் மாதேஸ்வரன், தே.மு.தி.க., வில் சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ்  சார்பில் முத்துகிருஷ்ணன், தியாகராஜன், இக்ரம்அகமது, சீனிவாசன், பிரகாஷ் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். 

             வேட்பாளர் அறிவிக்காததால், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். இந்நிலையில், ஓசூர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஏ.மனோகரன் மற்றும் ஆதரவாளர்கள், பா.ம.க., வேட்பாளர் ஜெயபிரகாசுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து, மாஜி எம்.எல்.ஏ., வும், ஐ.என்.டி.யூ.சி., மாநில துணைத்தலைவருமான மனோகரன் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: 

             ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் பா.ம.க., சார்பில் ஜெயரபிகாஷ் போட்டியிடுகிறார். இவர் கடந்த இரு சட்டசபை தேர்தலில்களில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர். மேலும், ஓசூர் நகரின் மைந்தர். அதனால், அவரை காங்கிரஸ் ஆதரவு வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். 

இதுகுறித்து மனோகரன் கூறியது: 

             ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டாலும், நான் மற்றும் என்னுடைய ஆதரவாளர்கள் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாகதான் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளோம். அதனால், ஓசூரில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளராக பா.ம.க., வேட்பாளரை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள், ஐ.டி.யூ.சி., நிர்வாகிகள், உறுப்பினர்கள், பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: