சங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காஞ்சிபுரத்தில் பா.ம.க.சுவர் விளம்பரம் மீது அ.தி.மு.க சுவரொட்டிகள்: மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் சாலை மறியல்

காஞ்சிபுரம் : 

          சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பா.ம.க.,வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. 

          காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூர் செல்லும் சாலையில், காரை கிராமம் உள்ளது. இங்கு, சாலையோரம் தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் சுற்றுச் சுவரில், பா.ம.க.,வினர் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, காரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய இணைச் செயலர் ராஜேஷ் சார்பில், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பா.ம.க.,வின் சுவர் விளம்பரத்திலிருந்த ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் உருவப்படத்தின் மீதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

             இதையறிந்த பா.ம.க.,வினர், காரை கிராமத்தில் மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் ஒன்று கூடினர். பகல் 12 மணிக்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் செய்ய ஊர்வலமாகச் சென்றனர். பின் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடம் சென்று போஸ்டர் ஒட்டியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.



திண்டிவனத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தை முடித்தார்

திண்டிவனம்:

          பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று பிரசாரத்தை முடித்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தியார் திடலில் பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.

மாலை 4.40 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது

             :இது ஜனநாயக முற்போக்கு கூட்டணி. எதிரணியில் ஜனநாயகமும் இல்லை; முற்போக்கும் இல்லை. கருணாநிதியை 5 நிமிடத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஜெ.,வையோ 10 நாட்கள் அல்ல, ஒரு மாதமானாலும் தொடர்பு கொள்ள முடியாது. 

            இது எனக்கு மட்டுமல்ல, இப்போது அந்த கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி தோழர்களும் இதை கூறுவர்.கருணாநிதியின் 10 ஆண்டு சாதனைகளையும், ஜெ.,வின் 10 ஆண்டு சாதனைகளையும் தராசில் எடை போடுங்கள். கருணாநிதி பக்கம் 1,000 மடங்கு கீழே இறங்கும். இந்த தேர்தலில் கருணாநிதி ஆதரவு அலை வேகமாக வீசுகிறது. ஜெ., ஆளத் தகுதியற்றவர். அவர் ஆட்சிக்கு வரக்கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சங்கரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரிப்பு

திண்டிவனம்:

              திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சங்கர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி ஓட்டு சேகரித்தார். திண்டிவனத்தில் செஞ்சி பஸ் நிறுத்தம், காந்தி சிலை, ஆர்.எஸ்.பிள்ளைவீதி, திண்டிவனம் மேம்பாலம் ஆகிய பகுதியில் ஓட்டு சேகரித்தார். 
அப்போது அமைச்சர் பொன்முடி கூறியது:-

                  கலைஞர் ஆட்சியில் சொன்னதை செய்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை செய்துள்ளார். எனவே தற்போது கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். மனசாட்சி உள்ள எவரும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வின் சலுகை திட்டங்களை நிறுத்தி விடுவார்கள். எனவே பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

                   ஓட்டு வேட்டையின் போது திண்டிவனம் தி.மு.க. நகர செயலாளர் கபிலன், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அசோகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமன், நகரமன்ற தலைவர் பூபாலன், நகரமன்ற துணை தலைவர் கவிதா முரளிதரன், கவுன்சிலர்கள் முருகன், ஏழுமலை, பா.ம.க. மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில துணை தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் மலர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்புராயலு, கவுன்சிலர்கள் வடபழனி, ஜெயராஜ், முரளிதாஸ், ராமன், காங்கிரஸ் நகர தலைவர் விநாயகம், புலிமணி, தரண், தனபால், விடுதலை சிறுத்தை கட்சி நகர அமைப்பாளர் திலீபன், மாநில அமைப்பாளர் ரமேஸ்நாதன், நகர செயலாளர் பூபால், இளஞ்சேரன், இளம்செல்வன், திருமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் சங்கர் ஓட்டு சேகரிப்பு

திண்டிவனம்:


           திண்டிவனம் (தனி) தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் சங்கர் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றார்.  திண்டிவனம் தனித் தொகுதி திமுக கூட்டணியில் பாமகவுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. பாமகவில் மாவட்டத் தலைவராக உள்ள சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.  

                இந்நிலையில் திண்டிவனம் நகருக்கு வந்த சங்கர், பாமக மாவட்டச் செயலர் ஏழுமலை, நகரச் செயலர் மலர்சேகர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக நகரச் செயலர் வெண்ணிலாகபிலனை சந்தித்த வேட்பாளர் சங்கர், தனக்கு  ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் ரமேஷ்நாதன் மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் பெற துவங்கியுள்ளார். 

                   சந்திப்பின் போது பாமக நகர மன்ற உறுப்பினர்கள், மரக்காணம் ஒன்றியச் செயலர் நடராஜ், கிளியனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் பூதேரிராஜேஷ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.