மாமல்லபுரத்தில் பாமக நடத்திய மாநாட்டுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக உறுப்பினர் வேல்முருகன்,
ஏப்ரல் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டில் பங்கேற்று திரும்பிய டாக்டர் ராமதாஸக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்து துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது:
ஏப்ரல் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் பாமக நடத்திய மாநாட்டுக்கு ஒரு ஐ.ஜி., 4 கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், 10 துணை காவல் துறை கண்காணிப்பாளர்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 88 சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,000 போலீஸôர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர, சிறப்பு காவல் படையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீஸôர் தயாராக வைக்கப்பட்டிருந்தனர். மாமல்லபுரம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டன. அதனால்தான் பாமக தொண்டர்களும், தலைவர்களும் சிரமமின்றி மாநாட்டுக்கு வந்து செல்ல முடிந்தது என்றார்.