நெய்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெய்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சி தேர்தலையொட்டி நெய்வேலியில் அனைத்து கட்சி கூட்டம்: பா.ம.க. சார்பில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி பங்கேற்பு


நெய்வேலி:

            உள்ளாட்சி தேர்தலையொட்டி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, சப்- இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, அசோக் குமார், சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

          கூட்டத்தில் பா.ம.க. சார்பில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி, 
அ.தி.மு.க. சார்பில் தாண்டவன்குப்பம் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் பாலமுருகன் மற்றும் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள், உள்ளிட்ட ஆதண்டார் கொல்லை, காட்டு கூடலூர், மேலக்குப்பம், நைனார்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு பேசும் போது 
 
            உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், சட்டத்துக்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்றும் தேர்தல் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 
 

நெய்வேலி குடிசைப் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

நெய்வேலி:

              நெய்வேலி வட்டம் 21 மற்றும் 30 பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டப் பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 

 சட்டப் பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. தி.வேல்முருகன், புதன்கிழமை பேரவையில் பேசியது: 

              என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிகின்ற 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி வட்டம் 21, 30-ல் உள்ள குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மின்சாரம் வழங்க மறுத்து வருவது வேதனைக்குரிய செய்தி. மேலும் அவர்கள் வசிக்கின்ற இடத்துக்கு அதிக தொகையில் தரை வாடகை கோருகிறார்கள்.  இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக என்.எல்.சி. நிர்வாகத்தை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படுத்திட வேண்டுகிறேன்.  மேலும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். 

            மாநில அரசின் கல்வித்துறை வழங்குகின்ற வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்க மறுக்கிறார்கள்.  என்.எல்.சி.யில் காலங்காலமாக பின்பற்றப்பட்ட பணி நேரம் என்பது தற்போது மாற்றியமைக்கப்பட்டு, காலை 9 முதல் மாலை 5,30 வரை பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டால் அடக்குமுறை நடைபெறுகிறது. இந்த நிலைகளை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

               மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிமருந்துகளால், சுரங்கப் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள கிராமங்களான வானதிராயபுரம், தென்குத்து கிராமங்களில் உள்ள வீடுகள் குலுங்கின்றன. ஆடு, மாடுகள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் கையகப்படுத்தும் வீடுகளுக்கு மாற்றிடம் தர மறுக்கிறார்கள்.  இதனால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போராட்ட நடவடிக்கையில் ஈடுபட நேரிடுகிறது. 

               ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் இதை பொருட்படுத்திக் கொள்வதில்லை.  எனவே என்.எல்.சி. நிறுவனத்தினரை அழைத்து பேசி, இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இத் தருணத்தில் கேட்டுகொள்வதாக வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.


15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள்: எம்.எல்.ஏ.தி.வேல்முருகன்

நெய்வேலி:

            கூட்டணி தொடர்பாக கோபாலபுரமோ அல்லது போயஸ்கார்டனோ செல்லாமலிருக்கவேண்டுமானால் வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பேசினார்.

நெய்வேலியில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாசுடன் வந்த எம்.எல்.ஏ. வேல்முருகன் அங்கு பேசியது:

              பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சிணை தான் முக்கிய காரணம். எனவே வரதட்சிணையை வேரறுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால், நாம் போயஸ்கார்டனோ அல்லது கோபாலபுரமோ செல்ல வேண்டியிருக்காது. 15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள், வருங்காலத்தில் தமிழகத்தில் ஒரு வன்னியரை முதல்வராகிக் காட்டுகிறோம். பாமக தலைமையில் ஆட்சி அமையுமேயானால், மது விலக்கை அமல்படுத்துவதே முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார் வேல்முருகன்.


வன்னிய சமூகத்து மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு படிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

நெய்வேலி:

             நெய்வேலியில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் இன்று கலந்து கொண்டார்.  அதற்கு அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுப்போம் என்று ராமதாஸ் கூறினார். 
 
முன்னதாக மண மக்களை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியது:-

              வன்னியர் சமூகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாணவ- மாணவிகள் கல்வி துறையில் முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். இப்போது நெய்வேலியில் மேடையில் வாழ்¢த்தி பேசிய சுமதி என்ற பெண் தனது மகன் ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் படித்து வருவதாக குறிப்பிட்டார்.

             இதுபோல வன்னிய சமூகத்து மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு படிக்க வேண்டும். வன்னியர் சமூகத்துக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து பிரதமரிடமும் சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி பேசியதால் அன்றைய தினமே மந்திரி சபை கூட்டத்தில் தனி ஒதுக்கீடு பெற்று வெற்றி கண்டோம். வன்னியர் சமூக மாணவ- மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய தேர்வுகள் எழுத பயிற்சி அளிக்க திண்டிவனத்தில் தனி பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

             இதில் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும். நமது சமூகத்தினர் உயர் பதவிகளுக்கு வராததற்கு காரணம் ஒற்றுமையின்மை. இதற்கு என்ன வழி என்று கேட்டால் 15 வயதில் இருந்து 30 வயது வரை உள்ளவர்களை என்னிடத்தில் விடுங்கள். அவர்களுக்கு ஒற்றுமை உணர்வை தூண்டி வெற்றி பெற வைக்கிறேன்.  நமது சமூகம் பின் தங்கியதற்கு மற்றொரு காரணம் மதுவிற்கு அடிமையானதுதான். மதுவை முழுமையாக விட்டொழிக்க சபதம் ஏற்று ஆண்கள் செயல்பட வேண்டும். கிராமங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பெண்கள் சமூகத்தில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு மற்றும் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ம.க.ஆட்சிக்கு வந்தால்அனைவருக்கும் இலவச கல்வி: அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி : 
           கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வர்களாக சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்து வரும் நிலைமை மாற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார். 

            கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க., பயிற்சி கூட்ட அரங்கம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., வேல்முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் திருமால்வளவன், வடக்குத்து ஜெகன், வைத்தியலிங்கம், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது: 

               தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள வன்னியர் சொந்தங்களை பா.ம.க.,விற்கு கொண்டு வர நீங்கள் அனைவரும் போராட வேண்டும்.மதுவை ஒழிப்போம் என தி.மு.க., - அ.தி.மு.க.,வால் சொல்ல முடியுமா? ஆனால் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்ததாகத் தான் இருக்கும். 

              அதுபோல அனைவருக்கும் இலவச கல்வி, படித்து முடித்தவுடன் இலவச வேலைவாய்ப்பு. ஆனால் வேறு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம். பா.ம.க.,வைத் தவிர பிற கட்சிகள் வளர்ந்து, சரிந்து, முடிந்துபோன கட்சிகள். கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்த நிலை மாற வேண்டும். பா.ம.க., தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நெய்வேலி தொகுதியில் பா.ம.க., தனித்து நின்றாலே ஜெயிக்கும்.

              பா.ம.க.,விற்காக உழைத்து கட்சியிலிருந்து விலகியவர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து நான் கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார். 

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

           அம்பானி மகனுக்கு கிடைக்கும் தரமான அதே கல்வி, என் சமுதாய மக்களுக்கும் கிடைக்க போராடுவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. நமது கட்சியில் வயதானவர்கள் விலைபோய் விடுவார்கள். ஆனால் இளைஞர்கள் விலை போக மாட்டார்கள். 

           தேர்தலின்போது, கொள்ளையடித்த பணத்திலிருந்து 500, 1000 ரூபாய் என அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டுப்போடுவோம் எனக்கூறி, அவர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் உங்களுக்கு திரும்பித் தருகின்றனர். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 

பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்க ராமதாஸ் வேண்டுகோள்

               
           அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களின்  பிரதிநிதித்துவம் பெற்ற தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்குமாறு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
            நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மிகக் குறுகிய காலத்தில் நிர்வாகத்துடன் போராடி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வாக்களித்து, அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து போராடுவோம்: ராமதாஸ்

         நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  இல்லையெனில் நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து, கடலூர் மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமைவெளியிட்ட அறிக்கை:

                       நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008-ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 5 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.  ஆனால் நிலக்கரி நிறுவனம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இதற்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், நிலக்கரி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  விபரீத நிகழ்வு எதுவும் நடப்பதற்கு முன்னர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இல்லையெனில், தொழிலாளர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். அப்போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.